ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பழுதான வகுப்பறைகளை சீரமைக்க வலியுறுத்தி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் கட்டிடத்தை சீரமைக்கக் கோரி பெற்றோர் போராட்டம்

செய்திப்பிரிவு

பழுதடைந்த பள்ளி வகுப்பறைக் கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி எதிரில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் குட்டைமேடு வீதியில் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.

நேற்று காலை மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிமென்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த மாணவியரின் பெற்றோர் திரண்டு வந்த பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது;

பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. எப்போது இடிந்து விழும் என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் கட்டிடத்தின் சிமென்ட் சிலாப் இடிந்து விழுந்துள்ளது.

விடுமுறை தினம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பழுதான கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். மாணவியருக்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.

தகவல் அறிந்து வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT