திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் மதவழிபாட்டுத் தல விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளின் முற்றுகைப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த முஸ்லிம் மத வழிபாட்டுத் தலத்தை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 30-ம் தேதி வழிபாட்டுத் தல கட்டிடத்துக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கண்டித்து, பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து மத வழிபாட்டுத்தலத்துக்கு சீல் வைக்கும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். ஒரு தரப்பினருக்கு ஆதரவாக எம்எல்ஏ செல்வராஜ் செயல்படுவதாகக் கூறி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. அதேபோல பல்வேறு அமைப்புகள் எம்எல்ஏ வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் மாநகர காவல் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் உள்ள க.செல்வராஜ் வீட்டுக்கு நேற்று காலைமுதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.