உடுமலையில் ரூ.5.56 கோடி மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கென சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததால், அரசு ஐடிஐ வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உடுமலை கண்ணம்மநாயக் கனூர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைஅடிப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கென சொந்த கட்டிடம் கட்டவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஐடிஐ-க்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே 3.5 ஏக்கர் பரப்பில் தரை தளம், முதல் தளத்துடன் கூடிய 2,000 சதுர மீட்டர்பரப்பிலான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வுக்கூடம், 70 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி வசதி உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளுடன் இக்கட்டிடம் விளங்குகிறது.
இக்கட்டிடம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததால், அரசுக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘அரசு ஐடிஐ-க்காக சொந்த கட்டிடம் கட்டி முடித்தும் இதுவரை திறக்கப்படவில்லை. தனியார் கட்டிடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தை விரைந்து திறக்க தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.