தமிழகம்

தமிழக ஆட்சியாளர்களிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

உதகையில் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஏடிசி திடலில் நேற்று நடந்தது. பாஜக வேட்பாளர்கள் ஜே.ராமன் (உதகை), குமரன் (குன்னூர்), அன்பு (கூடலூர்) ஆகியோரை அறிமுகம் செய்து மத்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

ஏழை எளிய மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு திட்டமும் நிறைவேற்றும்போது, அத்திட்டத்தின் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு பயன் உள்ளதா, வேலைவாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்த பின்னரே திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி உத்தரவிடுகிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல் இலவசம் என்ற பெயரில் வாக்குகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது. ஊழல் கட்சிகளை புறம் தள்ளிவிட்டு நல்ல கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

நிருபர்களிடம் அமைச்சர் பேசும்போது, ‘‘நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான பசுந்தேயிலை பிரச்சினை குறித்து நன்கு அறிவேன். எனது அமைச்சரவையில் தான் இந்த துறை உள்ளது. தேர்தல் சமயம் என்பதால், எவ்வித வாக்குறுதிகளும் அளிக்க முடியாது. மாநிலங்களில் எந்த கட்சிகள் ஆட்சி செய்தாலும் பாகுபாடு காட்டாமல், அந்த கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து மக்களுக்கு அனைத்துத் திட்டங்களும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT