தமிழகம்

அட்சயதிருதியை நாளையொட்டி தேவை 30% அதிகரிப்பு: தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டியது

செய்திப்பிரிவு

அட்சயதிருதியை நாளையொட்டி தங்கத்தின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளதால், கடந்த 21 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23,008-க்கு விற்பனையானது.

வரும் 9-ம் தேதி அட்சயதிருதியை நாள் என்பதால், கடந்த சில நாட்களாக தங்கத்தின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.568 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23,008-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 876-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 870 ஆக இருந்தது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 072-க்கு விற்கப்பட்டது. எனவே, கடந்த 21 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்க செயலாளர் விளக்கம்

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘அட்சயதிருதியை நாளை முன்னிட்டு நகைக் கடைகளுக்கு மக்கள் ஆர்வமாக வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை கடந்த சில நாட்களாக 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதுவே, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, அடுத்த 10 நாட்களுக்கு தங்கத்தின் தேவை அடிப்படையில் விலை உயர்வு இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT