தமிழகம்

ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியில் சுண்ணாம்பு, செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வுப் பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

வைகுண்டம் அருகே ஆதிச்ச நல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

8 மாதமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது.

1902-ம் ஆண்டு தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் ரியா இங்கு அகழாய்வு செய்த போது தங்கத்தால் செய்யப் பட்ட நெற்றிப்பட்டயம் கண்டு பிடிக்கப் பட்டது. தற்போது 120 வருடங் களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆதிச்சநல்லூரில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைதளம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் அருகே சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 3,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வு பணியில் கிடைத்து வருகின்றன.

SCROLL FOR NEXT