தமிழகம்

வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை: வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

உரிய சிகிச்சைக்குப் பிறகு வனப்பகுதிக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்னையால் அவதியடைந்து நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வனத்துறையினர் வாழைத் தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கே திரும்பி வந்தது. அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டுசெல்ல உத்தரவிடக்கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவன அறங்காவலரான முரளிதரன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முறையாக சிகிச்சைஅளிக்கப்படாமல் ரிவால்டோ யானை வனப்பகுதியில் விடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

வனத்துறை தரப்பில், ‘‘ரிவால்டோ யானையை 5 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. தற்போது அந்த யானை ஆரோக்கியமாக இருப்பதாகக்கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT