கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வி.பாலாஜிக்கு ‘சைமா சேவை விருது’ வழங்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம் (சைமா) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திருவல்லிக்கேணி என்.டி.கே பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக யுனைடெட் இந்தியா நிறுவன பொதுமேலாளர் ஜி.சுந்தர்ராமன், தமிழக அரசு முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், யுனைடெட் இந்தியா பொதுமேலாளர் ஜி.சுந்தர்ராமன், ராயல் சுந்தரம் காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு தலைவர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி மற்றும் சேவையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
கரோனா காலத்தில் சிறப்பாக மக்களுக்கு தொண்டாற்றிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வி.பாலாஜிக்கு 2022-ம் ஆண்டுக்கான சைமா சேவைவிருதை வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து, 1,200 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பதக்கம், 25 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவற்றையும் அவர்கள் வழங்கினர்.