காஸ் சிலிண்டர் வழங்காமல் அலைக்கழித்த தனியார் ஏஜென்ஸி மற்றும் ஐஓசி இணைந்து நுகர்வோருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூவாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(55), இவர், மன்னார்குடியில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்காக தனியார் காஸ் ஏஜென்சி அலுவலகத்துக்கு சென்றபோது, அவரது இணைப்பு மன்னார்குடியில் உள்ள மற்றொரு காஸ் ஏஜென்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியதால், கந்தசாமி அந்த காஸ் ஏஜென்சிக்கு சென்று காஸ் சிலிண்டர் கேட்டுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள், எங்கள் ஏஜென்ஸிக்கு மாற்றியதற்கான உத்தரவு எதுவும் வரவில்லை. எனவே, நீங்கள் பழைய காஸ் ஏஜென்ஸியிடமே காஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். 2 காஸ் ஏஜென்ஸிகளும் இதே காரணத்தைக் கூறி, தொடர்ந்து 7 மாதங்களாக கந்தசாமிக்கு காஸ் சிலிண்டர் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
பின்னர், காஸ் இணைப்பை புதுப்பிக்க திருச்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கந்தசாமி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, சேவை குறைபாடு, மன உளைச்சல்,பொருள் நஷ்டம் ஆகியவற்றுக்காக ரூ.2 லட்சம், உரியநேரத்தில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யாமல் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை கஷ்டப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.10,000 என மொத்தம் 3.10 லட்சத்தை 2 காஸ் ஏஜென்சிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திருச்சி சீனியர் ஏரியா மேலாளர், சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ஆகியோர் சேர்ந்து நான்கு வார காலத்துக்குள் கந்தசாமிக்கு வழங்க வேண்டும் எனவும், 2 காஸ் ஏஜென்சிகளில் ஒரு ஏஜென்ஸி தங்கு தடையின்றி கந்தசாமிக்கு மீண்டும் காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் எனவும் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை 6 வார காலத்துக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க தவறும்பட்சத்தில், உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.