காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் ஆதிகாலத் தமிழர்களின் வாழ்விடத் தடங்களைக் கொண்ட மணல் மேடு, பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
வடக்குப்பட்டு கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுத் துண்டுகள், பழங்கால கட்டுமானச் செங்கற்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன. இவற்றை தொல்லியில் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த மணல் மேட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வயல் வெளி வரப்பில் பழமை வாய்ந்த சிவபெருமான் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது. இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிலை போல் உள்ளது. இந்தச் சிலைகள் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக கருதப்படும் லட்சுமி சிலை, மேலும் ஒரு அம்மன் சிலையும் காணப்படுகின்றன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இரும்பு காலத்தைச் சேர்ந்த மணல் மேடு ஒன்றும் உள்ளது.
இதனை தொல்லியல் துறை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.