சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 231 பேர் சட்டப்பேரவை தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவியேற்கின்றனர்.
தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவைக்கான பதவிக் காலம் கடந்த 22-ம் தேதியுடன் முடிந்தது. அரவக்குறிச்சி, தஞ்சை தவிர தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் 134 தொகுதிகளில்அதிமுக வெற்றி பெற்றது. 2-வது முறையாக மீண்டும் ஆட்சியையும் பிடித்தது. முதல்வராக ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் மே 23-ம் தேதி பதவியேற்றனர். அன்று பிற்பகல் சட்டப்பேரவை தற்காலிக தலை வராக செம்மலை பதவியேற்றார். இந்நிலையில், இன்று சட்டப் பேரவை கூடும் என நேற்று முன்தினம் இரவு சட்டப்பேரவை செயலர் அ.மு.பி.ஜமாலுதீன் அறிவித்தார்.
இதன்படி, இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடு கிறது. எம்எல்ஏக்களாக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 231 பேருக்கு சட்டப்பேரவை தற்காலிக தலைவர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
விதிகள்படி, முதலில் முதல்வர், அடுத்ததாக அமைச்சர்கள், எதிர்க் கட்சி தலைவர்கள், சட்டப்பேரவை முன்னாள் தலைவர், முன்னாள் துணைத் தலைவர், எம்எல்ஏக்கள் என்ற வரிசைப்படி பதவிப்பிர மாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 3-ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. அன்று சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும். சட்டப்பேரவை தற்காலிக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சட்டப்பேரவை தலை வரை இருக்கையில் அமர வைப்பர். அவரை வாழ்த்தி ஆளுங் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவர். சட்டப்பேரவை தலைவர் நன்றியுரையுடன் கூட்டத்தொடர் முடிவுறும்.