தமிழகம்

அரியலூர் சார் ஆட்சியர் குடியிருப்பில் அகற்றப்பட்ட சீமைக் கருவேல முட்செடிகள்

செய்திப்பிரிவு

அரியலூர்: ‘இந்து தமிழ்' செய்தி எதிரொலியாக, அரியலூரில் சார் ஆட்சியர் குடியிருப்புக் கட்டிடத்தை ஆக்கிரமித்து இருந்த கருவேல முட்செடிகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.

அரியலூரில், திருச்சி சாலையில் சார் ஆட்சியருக்கான புதிய குடியிருப்பு ரூ.79.50 லட்சத்தில் கட்டப்பட்டு, 1.6.2020 அன்று அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கட்டிடத்தில் இதுவரை யாரும் குடியேறாததால், அக்கட்டிடம் பாழடைந்து வருவதாகவும், கட்டிடத்தைச் சுற்றி சீமைக் கருவேல முட்செடிகள் முளைத்து, புதர்மண்டிக் கிடப்பதாகவும் ஜூன் 14-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், சார் ஆட்சியர் குடியிருப்பை சுற்றிலும் வளர்ந்திருந்த சீமைக் கருவேல முட்புதர்களை வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் அகற்றி சுத்தம் செய்தனர். அதேவேளையில், இந்தக் குடியிருப்பை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT