வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் நேற்று முதல் பாலத்தின் வழியாகச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாளில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவை நிறைவு செய்து இலகு ரக வாகனங்கள் செல்லவும் துறை ரீதியான ஆய்வுக்குப் பிறகு கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று வழி ஏற்படுத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் சென்ற நிலையில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது ஆதரவாளர்களுடன் சென்றவர் பாலத்தின் குறுக்கே ரிப்பன் கட்டினார்.
இதனால், பாலத்தின் இரண்டு பக்கமும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பாலத்தை சீரமைக்க அதிமுக தான் காரணம் என்று எஸ்.ஆர்.கே.அப்பு, பாலத்தை முறையாக சீரமைக்கவில்லை என கூறி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பாலத்தின் இரண்டு பக்கமும் இருந்த இரும்பு தடுப்பு களை அதிமுகவினர் அகற்றினர்.
இந்த தகவலால் அதிர்ச்சி யடைந்த திமுகவினர் பாலத்தின் முன்பாக திரண்டனர். காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் எஸ்.ஆர்.கே.அப்புவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அரசின் அனுமதியின்றி மேம் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அதிமுகவினரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நாடாளு மன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், காட்பாடி மேம்பால பகுதியில் ஆய்வு செய்து செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘அ.தி.மு.க. வினர் பாலத்தை திறந்து வைப்பதாக கூறி அத்துமீறி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். அரசி யலுக்காக அதிமுகவினர் இப்படி செய்துள்ளனர். இனிமேல் அவர்கள் இதுபோன்று செயல் களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
பாலத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. இன்று முதல் (நேற்று) இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வருகிற 4-ம் தேதி முதல் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக் கப்படும்’’ என தெரிவித்தார்.
இதற்கிடையில், காட்பாடி காவல் நிலையத்தில் எஸ்.ஆர்.கே.அப்புவின் மீது தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா அளித்த புகாரில் ‘அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மேம்பால பகுதியில் அத்துமீறி நுழைந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக’ தெரிவித் துள்ளார்.
அதன்பேரில், எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அப்புவை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றனர். இந்த தகவலறிந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுகவினர் அப்புவின் வீட்டின் முன்பாக திரண்டனர். பின்னர், எஸ்.ஆர்.கே.அப்புவை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து காட்பாடி காவல் நிலையம் முன்பாக அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.