தமிழக மக்கள் நலனுக்காக நான் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு என் நன்றியை செயலில் காட்டுவேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்குப் பின் அதே போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் அதிமுகவுக்கு வழங்கி யுள்ளனர். நான் என்றும் மக்கள் பக்கம்தான்; மக்கள் என்றும் என் பக்கம்தான் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த வெற்றியாகும்.
திமுக ஊடகங்கள், பிரச் சாரங்கள் மூலம் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து விட்டனர். அவர்களது பொய் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கங்கள் அளித்தேன். ஆனாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் கோயபல்ஸ் பாணியில் தாங்கள் கூறிய பொய்களை திரும்பத் திரும்ப சொல்லி வந்தனர். அதிமுக அரசைப் பற்றி கற்பனை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்.
ஆனால், இவ்வா றெல்லாம் ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித் துள்ளனர். தமிழக மக்களை அதிலும் குறிப்பாக ஏழை மக்களை காக்கும் இயக்கம் அதிமுகதான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர்.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் 134 இடங்களில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். என் மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் நலனுக்காக நான் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு எனது நன்றியை செயலில் காட்டுவேன்.
தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், தோழமை கட்சித் தலைவர் களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.