சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக தமிழகம் முன்னேற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் சிறந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 17 மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு விருது வழங்கிப் பேசியதாவது:
கரோனா போன்ற பேரிடரை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அதேசமயம், அதைமறக்கவும் முடியாது. ஆனால், நாட்டின் தலைமை செயல் அதிகாரியான பிரதமர், தங்களைக் காப்பாற்றுவார் என்று மக்கள் நம்பினர். அதுவே, கரோனாவிலிருந்து மீள்வதற்கான சக்தியைக் கொடுத்தது.
மனிதவள மேம்பாடு என்று கூறுகிறோம். ஒரு மனிதனை எப்படிவளமாகப் பார்க்க முடியும். எனவே, முந்தைய ஆட்சியில் இருந்த மனிதவள அமைச்சகத்தின் பெயரை, நாங்கள் பொறுப்பேற்றவுடன் கல்வி அமைச்சகமாக மாற்றினோம்.
தற்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்திய தேசம் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.
நாட்டின் 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகளே உள்ளன. நாம்நிச்சயம் வளர்ச்சி பெற வேண்டும். தமிழகம் வளர்ச்சி பெறுவதற்கான அனைத்து மூலப் பொருட்களையும் கொண்டுள்ளது. ஆனால், ஏன் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை?
தமிழகத்தைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாக மகாராஷ்டிராவும், 7 மடங்கு அதிகமாக கர்நாடாகாவும் முதலீடுகளை ஈர்க்கின்றன.
நாட்டின் வளர்ச்சிக்காக தமிழகம் முன்னேற வேண்டும். அதற்குதொழில் துறையினர் உதவிபுரிய வேண்டும். மக்கள் என்ன செய்தாலும், அது நாட்டுக்கானது எனக்கருதி, அதை சிறப்பாகச் செய்தால் நாடு நிச்சயம் வளம்பெறும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஃபிக்கி தமிழ்நாடு மாநிலக் குழு மனிதவளப் பிரிவு அமைப்பாளர் என்.ஆர்.மணி, கோஃப்ரூகல் டெக்னாலஜிஸ் நிறுவனர் குமார் வேம்பு, சோஹோ பள்ளித் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, ஃபிக்கி தமிழ்நாடு மாநிலக் குழுத் தலைவர் ஜி.எஸ்.கே வேலு, இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜன், திருச்சி ஐ.ஐ.எம். இயக்குநர் பவன் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.