தமிழகம்

ஈரோடு | கருமுட்டை விற்பனை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம், கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சுகாதாரத்துறை சார்பில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீஸார், ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமி, தொடர் விசாரணை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மேலும், தன்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்துள்ளார். நேற்று காலை கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தைக் குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காப்பக நிர்வாகிகள் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள போலீஸார், மனநல மருத்துவர்களைக் கொண்டு சிறுமிக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT