தமிழகம்

‘நாயகன் மீண்டும் வர்றார்...’ - இதுவரை 54 கி.மீ... 12 கோடி பயணங்கள்... சென்னை மெட்ரோ இனி? | #7YearsofChennaiMetro

கண்ணன் ஜீவானந்தம்

தினமும் ஆயிரம் பேர் நடந்து சென்றாலும் ‘பளீச்’ என்று இருக்கும் தரை, நுழைந்ததும் சில்லிடும் ஏசி, மின்னும் சுரங்கப் பாதைகள், நாணயம் வடிவிலான பிளாஸ்டிக் டிக்கெட் என்ற இந்த வர்ணனைகளை நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கும் போதே நான் எதைப் பற்றி கூற வருகிறேன் என்பதை யூகித்து இருப்பீர்கள். அப்படி நீங்கள் சரியாக யூகித்து இருந்தால், இந்தக் காட்சிகள் எல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் பழகிப் போன ஒன்றாகவே இருக்கும்.

தினசரி காலையில் வீட்டில் இருந்து கிளம்பி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாடி வதங்கியவர்களும், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானம், ரயிலை தவற விட்டவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இப்படி பல பெருமைகளுடன் சென்னை மக்களின் சேவகனாக மாறியுள்ள "சென்ன மெட்ரோ" புதன்கிழமை தனது 8-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.

"சென்னை மெட்ரோ" ரயில் தனது முதல் பயணத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஆனால் இதனை உருவாக்க 9 ஆண்டுகள் தேவைப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை 2006-ம் ஆண்டு தமிழக அரசு முன் மொழிந்தது. அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல்கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு 2009-ம் ஆண்டு அனுமதி அளித்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு 2015-ம் ஆண்டு சென்னை மெட்ரோ தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.18,380 கோடி செலவில் 45.10 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட்டது. இதன் இணைப்பு திட்டம் ரூ.3,770 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு, விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

தொடக்கத்தில், மெட்ரோ ரயிலின் கட்டணம் அதிகமாக உள்ளது என்று பலர் அதனைப் பயன்படுத்த முன்வரவில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல மட்டுமே வசதி இருந்தது. தற்போது ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகம் பேர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தற்போது வரை சென்னையில் மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பயணங்களின் மொத்த எண்ணிக்கை 12 கோடி.

  • 2015 - 26.34 லட்சம்
  • 2016 - 36.37 லட்சம்
  • 2017 - 73.99 லட்சம்
  • 2018 - 1.48 கோடி
  • 2019 - 3.13 கோடி
  • 2020 - 1.18 கோடி
  • 2021 - 2.54 கோடி
  • 2022 - 2.44 கோடி

இந்த விபரங்களின் படி, 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக 3.13 கோடி பயணங்களை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி இந்தப் பணிகள் முடிவடைந்தால் 2026-ம் ஆண்டில் 173 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பயன்பாட்டில் இருக்கும். அதன்மூலம் 168 நிலையங்களின் வழியாக, தினமும் 10 லட்சம் பேர் பயணிக்க முடியும்.

  • வழித்தடம் 3 - மாதவரம் டூ சிறுசேரி - 45.8 கி.மீ - அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் வழி
  • வழித்தடம் 4 - கலங்கரை விளக்கம் டூ பூந்தமல்லி - 26.1 கி.மீ - தி.நகர், வடபழனி, போரூர் வழி
  • வழித்தடம் 5 - மாதவரம் டூ சோழிங்கநல்லூர் - 47.0 கி.மீ - வில்லிவாக்கம், ராமாபுரம், மேடவாக்கம் வழி

இந்த 3 வழித்தடங்களில் மட்டும் 128 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் மயிலாப்பூர் ரயில் நிலையம் 4 அடுக்கு ரயில் நிலையமாக அமைய இருக்கிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் , பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் ஆகியவைகளை இணைக்கும் நிலையமாக மயிலாப்பூர் உள்ளது. பூமிக்கு அடியில் 114 அடி ஆழம், 492 அடி நீளத்திலும், நான்கு அடுக்குகளாக அமையும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் பயணியர் நடமாடும் பகுதி, பயணச்சீட்டு வழங்குமிடங்களும், மற்ற மூன்று தளங்களிலும் ரயில் நிலையங்கள் செயல்படும்.

2-வது கட்ட திட்டம் தவிர்த்து இணைப்பு திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நீட்டிக்கப்பட்ட 5 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.

  • விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
  • பூந்தமல்லி - திருப்பெரும்புதூர்
  • திருமங்கலம் - ஆவடி
  • சிறுசேரி - கேளம்பாக்கம்
  • கேளம்பாக்கம் - கிளாம்பாக்கம்

இந்த வழித்தடங்களின் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பின்னர் இவற்றை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த மெட்ரோ பணிகளைத் தவிர்த்து கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயிலை, மத்திய அரசிடம் இருந்து பெற்று மாநில அரசு சார்பில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரயில் 2 கட்ட பணிகள் நிறைவடையும் 2026-ம் ஆம் ஆண்டில் தான் தமிழக அரசின் சிங்கார சென்னை 2.0 திட்டமும் நிறைவடையும். அப்போது, சிங்கார சென்னையின் நாயகனாக "சென்னை மெட்ரோ ரயில்" இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

SCROLL FOR NEXT