திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து துறைகளுடன் இயங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட மையப்பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 7 அடுக்கு மாடிகள் கொண்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை தற்காலிக கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதால், ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகம் துறை சார்ந்த அதிகாரிகளுடன் எப்போதிலிருந்து இயங்கும் என கேள்வி எழுந்தது.
இது குறித்து ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது, ‘‘ முதற் கட்டமாக புதிய ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அம ர்குஷ்வாஹா நாளை (இன்று) முதல் 2 நாட்களுக்கு ஆய்வு நடத்த உள்ளார். அதாவது, எந்த பகுதி எந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்வது. அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் யாவை ? அந்த அலுவலக அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது என்ன ? என்பது குறித்து அவர் ஆய்வு நடத்தவுள்ளார்.
அதன் பிறகு ஒவ்வொரு துறையாக புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்படும். முதற் கட்டமாக வருவாய் , ஊரக வளர்ச்சி, செய்தி மக்கள் தொடர்பு, சமூக நலம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் புதிய ஆட்சியர் அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. கடந்த வாரம் வரை மக்கள் குறைதீர்வுக்கூட்டம் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்று வந்தது.
வரும் வாரம் திங்கள்கிழமை ஜூலை 4-ம் தேதி புதிய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (ஜிடிபி ஹால்) நடைபெற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் எளிதாக வந்த செல்ல பாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக தோற்றவிக்கப்பட்டாலும் இன்னும் சில துறைகள் வேலூரில் இருந்து தான் செயல்படுகிறது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கொண்டு வர வேண்டும். உதாரணமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளர், மீன்வளம், தமிழ் வளர்ச்சி, சத்துணவு, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒரு சில துறை சார்ந்த உயர்அதிகாரிகளின் காலிப்பணியிடங் கள் நிரப்பட வேண்டியுள்ளது.
அதேபோல, வருவாய் துறையில் 3-ல் ஒரு பங்கு ஊழியர்களே திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு போட்டித்தேர்வுகள் மூலம் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். எதுவாக இருந்தாலும் அடுத்த ஒரு வாரகாலத்துக்குள் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்து துறைகளுடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.