புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பல வேட்பாளர்கள் வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு திலாசுபேட்டை விநாயகர் கோயில் வீதியில் உள்ளது. நேற்று பிற்பகல் புதுச்சேரி காமராஜர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு முதல்வர் ரங்கசாமி வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் 5 வாகனங்களில் அங்கு வந்தனர்.
முதல்வர் வீட்டினுள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் பிரச்சார வாகனங்களை முதலில் சோதனை செய்தனர். பின்னர், வீட்டினுள் சோதனை நடந்ததாகவும் தேர்தல் துறையினர் குறிப்பிட்டனர். சோதனையின் போது, வேறு யாரையும் வீட்டினுள் அனுமதிக்கவில்லை. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'முதல்வர் வீட்டினுள் ஏதும் கைப்பற்றப்படவில்லை' என்று தெரிவித்தனர்.
முதல்வர் வீட்டில் நடந்த இந்த சோதனை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவஹரிடம் கேட்டதற்கு, "முக்கியமான வேட்பாளர்கள் காரில் பணம் எடுத்து செல்வதாக புகார்கள் வந்தன.
அதனால் முக்கிய வேட்பாளர்களின் வாகனங்களில் சோதனை செய்யப்பட்டன. தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில்தான் சோதனைகள் நடத்தப்படுகின்றன" என்று தெரிவித்தார்.