இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் சென்டம் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு அது 18 ஆயிரத்து 642 ஆக குறைந்திருக்கிறது.
இதுகுறித்து 10-ம் வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு கணிதம், அறிவியல் வினாத்தாள்களில் ஒரு சில கேள்விகள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விடைத்தாள்களின் மதிப்பீடு சற்று கறாராகக்கூட இருந்திருக்கலாம். இதனால் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாமே தவிர 99, 98 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கக்கூடும்” என்றனர்.
கணிதம், அறிவியல் பாடங்களில் சென்டம் குறைந் திருப்பதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப் படுகின்றன. தமிழ்நாடு கட்டாய தமிழ் சட்டத்தின்படி, 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் தாள் முதலில் (மொழிச் சிறுபான்மை வகுப்பினர் உட்பட அனைவருக்கும்) கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தமிழ் மொழியில் அதிகளவு பரிச்சயம் இல்லாத மாணவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்ததால் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கட்டாய தமிழ் பாடத்துக்கு இந்த ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட குழப்பம் காரணமாக குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கணிதம், அறிவியல் பாடங்களில் உரிய வகையில் கவனம் செலுத்தாததால் இந்த பாடங்களில் சென்டம் குறைந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கட்டாய தமிழ் தாள் பிரச்சினை காரணமாகத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக சில பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.