திருநெல்வேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, மதிமுக வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ளனர். சிறுபான்மையினர் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதை வைத்தே இத் தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்படும்.
திமுக வேட்பாளர்
திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கானுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கை, அதிமுக ஆட்சியின் அவலம் குறித்து மக்களிடையே தீவிரப் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதற்கு பதிலடியாக, 3 முறை எம்எல்ஏவாகவும், அதில் ஒருமுறை மாநில அமைச்சராகவும் இருந்த மைதீன்கான் தொகுதி வளர்ச்சிக்கு என்ன செய்தார் என கேள்வி கேட்டு எதிரணியினர் மட்டுமின்றி, திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் ஹைதர்அலி மேலப்பாளையம் மண்ணின் மைந்தர். இதனால் அப்பகுதியிலிருந்து கணிசமான வாக்குகளை அவர் பெறுவார் என அக்கட்சியினர் கூறுகின்றனர். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குகளை திமுகவும், மதிமுகவும் பிரிக்கும்போது அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலப்பாளையம் மண்டலத் தலைவராக உள்ள ஹைதர்அலி, அப்பகுதியில் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்த வில்லை. மேலப்பாளையம் மண்டலத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என குற்றம் சாட்டி எதிரணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மதிமுக வேட்பாளர்
மதிமுக வேட்பாளர் நிஜாம், இத் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இத்தொகுதியில் உதவிகள் தேவைப்படுவோருக்கு உடனே சென்று உதவி வருபவர், சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது அவர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கியிருக்கிறார். இதுபோல் பல நேரங்களில் உதவிகளை செய்திருக்கிறார். எனவே அவருக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
திமுக, அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் இடையேயான போட்டியில் யார் முந்துவார் என்பது விரைவில் தெளிவாகிவிடும்.