தமிழகத்தில் அரசு அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டதும் ‘அவர்களை மாற்றக்கூடாது’ என அதிமுகவினர் குமுறுகின்றனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பாடல்கள் அடங்கிய ஆடியோ குறுந்தகடு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ''தமிழகத்தில் பாரபட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகள் குறித்து ஒரு பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் நாங்கள் கொடுத்து புகார் அளித்தோம். அந்த பட்டியலில் உள்ள பலரை இன்னமும் தேர்தல் ஆணையம் மாற்றவில்லை.
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டதும் ‘அவர்களை மாற்றக்கூடாது’ என அதிமுகவினர் குமுறுகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதிலிருந்தே மாற்றப்பட்ட அதிகாரிகள் அதிமுகவுக்கு சாதகமானவர்கள் என்பது விளங்கும்.
தேர்தல் ஆணையம் இதுவரை செய்ததைக் காட்டிலும் இனிமேல்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்'' என இளங்கோவன் கூறினார்.