சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள்சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இரு அணிகளாக இருப்பதால் கட்சி சார்பில் ஏ, பி படிவங்கள் கிடைக்காததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி ஊரக உள்ளாட்சிகளில் 498 இடங்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 இடங்கள் என மொத்தம்510 இடங்கள் காலியாக உள்ளன.இவற்றுக்கான தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. மனுக்களை திரும்பப் பெற 30-ம் தேதி கடைசி நாள்.
மொத்தம் உள்ள 510 பதவிகளுக்கு 800 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள், படிவம் ஏ மற்றும்படிவம் பி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். வேட்பாளர் பட்டியலிலும் பெயர் முன்னிலை பெறும்.
தற்போது அதிமுகவில் ஒற்றைதலைமை சர்ச்சை நீடித்து வருவதால், கட்சி சார்பில் ஏ, பி படிவங்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. அதனால் அந்தந்த மாவட்ட செயலர்கள், தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சுயேச்சையாக போட்டியிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்களிடம் உள்ளன. வேட்புமனு தாக்கலின்போது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை படிவங்களில் எழுதி கொடுப்பது வழக்கம். இந்த முறை இருஅணிகளாக இருப்பதால், அதிமுகவினர் வெற்றி பெறும்போது சிக்கலை ஏற்படுத்தும். அதனால்,சுயேச்சையாகவே போட்டியிடுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்’’ என்றனர்.