தமிழகம்

வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய குறிச்சி குளக்கரை நடைபாதை: இரவில் மதுக்கூடமாகவும் மாறுவதாக மக்கள் புகார்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் உட்பட 7 குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்த மேம்பாட்டுப் பணிகள், நிர்வாக காரணங்களால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: குறிச்சி குளக்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் காலை நேரங்களில் சரக்கு வாகனங்களை வியாபாரிகள் நிறுத்தி வைப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்வோர் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். அதோடு, இரவு நேரங்களில் நடைபாதையை மது அருந்தும் இடமாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். காலி மதுபாட்டில்களை குளக்கரையிலும், நடைபாதையிலும் வீசிச் செல்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘குறிச்சி குளக்கரையின் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீதும், நடைபாதையில் மது அருந்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக குறிச்சி குளக்கரையில் காந்தி நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 173 வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஏற்கெனவே குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், பலரும் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று தொடர்புடைய பகுதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், மாநகர காவல் துறையினர் உதவியுடன் அங்கு வசித்து வந்த மக்களை வெளியேற்றினர். வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 'குளக்கரையில் மொத்தமுள்ள 173 வீடுகளில் இன்று (நேற்று) மட்டும் 42 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அனைத்து வீடுகளையும் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT