சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரை தாக்கியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 10 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் நிலவுகிறது. இச்சூழலில்கடந்த 18-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்தில், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது இதில்,ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வந்தபோது, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் அங்கு வந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஜெயக்குமாரின் ஆதரவாளர் என கூறப்படும் பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்துவை (59) அடையாளம் தெரியாத சிலர் தாக்குதலும் நடத்தினர். இதில்,காயம் அடைந்த மாரிமுத்துஉடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீஸார் முதல்கட்டமாக சம்பவ இடத்தில் இருந்தகண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவாளர் என கூறப்படும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பேரணியாக சென்று பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், அங்கு வைத்திருந்த வரவேற்பு பேனர்களை கிழித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.