சென்னை: திருநெல்வேலியைச் சேர்ந்தவர் நெல்சன் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (40). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தனர்.
இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் இருவரும் நேற்று பிற்பகல் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய் சாக்கடைக்குள் மயங்கி விழுந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மற்றொருவர் கவலைக்கிடம்
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நெல்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவிகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.