தமிழகம்

உடல்நலக் குறைவால் திரைப்பட பாடலாசிரியர் காளிதாசன் மறைவு

செய்திப்பிரிவு

திரைப்பட பாடலாசிரியர் காளிதாசன் உடல்நிலை பாதிப்பால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 69.

இவர் ‘தாலாட்டு’ என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் பாடலாசிரியராக அறிமுகமாகி ‘சட்டம் என் கையில்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல்களை எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அவருக்கு பாலசுப்ரமணியன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மனைவியும் உள்ளனர். பாடலாசிரியர் காளிதாசன் உடல் தஞ்சையிலிருந்து நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு மூலகொத்தலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT