தமிழகம்

பள்ளிக் கல்வியில் இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துக: திருமாவளவன்

செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நடைபெறும் 11-ம் வகுப்பு சேர்க்கையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார்பள்ளிகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. அந்த ஆணையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகஅரசு முயற்சிக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை நடத்தக் கூடியவர்கள் பெரும்பாலும் அவரவர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து முதல் பிரிவான அறிவியல் பாடத் திட்டங்களில் அதிக சேர்க்கையை அளித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களிலேயே மாணவர் சேர்க்கையில் இத்தகைய முரண்பாடுகள் இருப்பதால் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற பாடத் திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

ஆகவே, இட ஒதுக்கீடு தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிரக் கண்காணிப்புக் குழுவையும், சீராய்வுக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் அனைத்துத் தரப்பு மாணவர்களும் அவரவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்துப் பாடப் பிரிவிலும் சேர்க்கை நடைபெற வழிவகை செய்ய தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT