தமிழகம்

திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: காவல் துணை ஆணையர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால்பண்ணை சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்தும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை என ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையர் வி.அன்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பழைய பால்பண்ணை சந்திப்பில் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வி.அன்பு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் (காலை, மாலை) தானியங்கி முறையிலான சிக்னல் சேவையை நிறுத்தி விட்டு, வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கைகளால் சிக்னலைஇயக்கும் முறையை கடைப்பிடிக்குமாறு காவல் ஆணையர் அறிவுறுத்தியிருந்தார். இதை செயல்படுத்தியபோது, வாகனங்கள் நெரிசல் இல்லாமல் சிக்னலை கடந்து சென்றது ஆய்வில் கண்டறியப்பட்டது.

எனவே, காலை, மாலை நேரங்களிலும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களிலும் இதேபோன்ற நடைமுறையை கடைபிடிக்குமாறு போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கூடுதல் போலீஸாரும் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரும் சாலையில்தான் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் டிவிஎஸ் டோல்கேட் செல்லக்கூடிய வாகனங்கள் காத்திருக்காமல் ஃப்ரீ லெப்ட் வழியாக எளிதாக செல்ல இடையூறாக உள்ள வாய்க்கால் பாலத்தின் மீதுள்ள உயரமான நடைபாதையை அகற்றி, சாலையை அகலப்படுத்தித் தர தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் கேட்கவுள்ளோம்.

மேலும், தஞ்சாவூர் வழித்தடத்திலிருந்து வரும் பேருந்துகள் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலேயே நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்தது. அதனால், அங்கு இரும்பு தடுப்புகளை வைத்து பேருந்துகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT