சென்னை: "சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல், உரிய நேரத்தில் முடிக்காமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளால் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகள், உயிரிழப்புகள் அனைத்திற்கும் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்" பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கடந்த 24-ம் தேதி சென்னை கே.கே.நகரில் ஒரு காரின் மீது மரம் விழுந்து வங்கி பெண் அதிகாரி ஒருவர் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது. அந்த சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே அந்த சாலையில் கடந்த வாரத்தில் மட்டும் இரு மரங்கள் விழுந்த நிலையிலும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் மூன்று வாரங்களுக்கு முன் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் ஒரு கார் விழுந்து சிறு காயங்களுடன் இருவர் உயிர் பிழைந்தது குறிப்பிடத்தக்கது.
அடையாறு, நேரு நகர் முதல் தெருவில், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம், எந்த விதமான பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படாமல் அலட்சியமாக தோண்டப்பட்டுள்ளது. இந்த பணியில் கடந்த 15 நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த பள்ளம் சுமார் 40 முதல் 50 அடி நீளம் கொண்டதாக உள்ளது. பொதுமக்களுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. இந்த சுற்று வட்டாரம் முழுவதும் பல ஆபத்தான பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது வெட்டிய பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் பல்வேறு விபத்துகள் தினமும் நடைபெறுகின்றன. பல ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு இடையூறாக இந்த பணிகள் காவ அவகாசமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி அதிகாரியிடம் பேசினேன்." நான் என்ன செய்வது சார்? இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஒப்பந்ததாரருக்கு பெசன்ட் நகரிலும் ஒப்பந்தம் கொடுத்துவிட்டது மாநகராட்சி. அதனால் பணியாளர்கள் அனைவரும் அங்கு சென்றுவிட்டனர். தாமதத்திற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தும் அவர்கள் பணியினை தொடங்க மறுக்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகி சொல்ல முடியாத வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒப்பந்ததாரருக்கு ஒரே நேரத்தில் பல பணிகளை ஏன் கொடுக்க வேண்டும்? அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்தாமல் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது? அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? உலக வங்கி மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் நடைபெறும் திட்டங்களில் ஏன் இந்த தாமதம்? ஊழலை தவிர வேறு காரணம் உண்டோ?
சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல், உரிய நேரத்தில் முடிக்காமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளால் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகள், உயிரிழப்புகள் அனைத்திற்கும் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். இவை அனைத்திற்கும் காரணம் முறையற்ற நிர்வாகமே, முறைகேடுகளே, லஞ்சம் மற்றும் ஊழலே. உடனே நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்? காலம் பதில் சொல்லும் இல்லையேல் பல உயிர்களுக்கு காலன் பதில் சொல்லும் நிலை உருவாகும்" என்று அவர் கூறியுள்ளார்.