திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அரசுத் தொகுப்பு வீட்டின் மேற்கூரையிலிருந்து சிமென்ட் பூச்சுபெயர்ந்து விழுந்ததில் தாய், மகள் காயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் ஊராட்சி மேலத் தெருவில் 40-க்கும் மேற்பட்ட அரசுத் தொகுப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிக்கொடுக்கப்பட்டன. இவ்வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொகுப்பு வீடு ஒன்றில் வசித்து வரும் சேகர்(65) என்பவரது வீட்டின் மேற்கூரையின் பூச்சு நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து விழுந்தது.
இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சேகரின் மனைவி அன்பழகி(55), மாற்றுத்திறன் மகள் விஜயகுமாரி(23) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்தத் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அரசுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று தொகுப்பு வீடுகளை பார்வையிட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.