புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வாஷிங் மெஷின், செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ரங்கசாமி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனரும் முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். முதல் பிரதியை கட்சியின் பொதுச்செயலர் பாலன் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் முழு மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறியமாநிலமான புதுச்சேரிக்கு முக்கிய வருவாய் மது மூலம் கிடைக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த பகுதி. இங்குள்ள பழக்க வழக்கங்கள் வேறு. வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். மேலும் கலால்துறையின் மூலம் தான் அதிக வருவாய் புதுவைக்கு கிடைக்கிறது. அதனால் மதுவிலக்கு இல்லை.
புதுச்சேரி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எப்போதும் உறவு நல்லபடியாகவே உள்ளது. யூனியன் பிரதேசம் ஆதலால் மத்திய அரசுடன் நல்லமுறையில் உறவை பேணி வருகிறோம். புதுச்சேரி மக்களின் முக்கிய கோரிக்கையான மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கட்சி தொடங்கி முதல் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. தற்போது 2வது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம்.
புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வாஷிங் மெஷின், செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும். வீடில்லாதவர்களுக்கு இலவச மனை அல்லது தொகுப்பு வீடு தரப்படும். அரசு பள்ளிகளில் 10, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி தரப்படும். மாணவர்கள் உயர் கல்விக்காக வங்கிகள் மூலம் பெற்ற கடனை வட்டியுடன் அரசே செலுத்தும் என்று குறிப்பிட்டார்.