தமிழகம்

“மூன்றாம் கலைஞர் வேண்டாம்... என்னை சின்னவர் என்றே அழையுங்கள்” - உதயநிதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்க வேண்டாம். சின்னவர் என்று மட்டுமே அழையுங்கள் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுகவின் மூத்த நிர்வாகிகள் 1,051 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, உதயநிதி ஸ்டாலின் பேசியது: "இந்த இடத்தில் பேசிய கருணாநிதி முதல்வரானார், மு.க.ஸ்டாலின் முதல்வரானார் என்றெல்லாம் கூறி இந்த மைதானத்தை ராசியான இடமாக கூறினார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், திமுகவினரின் உழைப்பில், அன்பில் மட்டும் நம்பிக்கை உண்டு.

என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், கலைஞர் என்றால் அவர் ஒருவர் மட்டுமே. எனவே, எல்லோருக்கும் நான் சின்னவராக இருப்பதால் என்னை சின்னவர் என்று மட்டும் அழையுங்கள்" என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, கவிதைப்பித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "திராவிட மாடல் தேசிய மாடலாக மாறுமா என்பதற்கு நான் கருத்து சொல்ல முடியாது. திமுகவில் 'அ' டீம், ‘ஆ' டீம் என எந்த டீமும் இல்லை. ஒரே டீம் தான் உள்ளது. அதுவும் தலைவர் மு.க.ஸ்டாலின் டீம் மட்டுமே உள்ளது "என்றார்.

முன்னதாக, பாத்தம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் எய்ம்ஸ் செங்கல்லைப் போன்று வடிவமைக்கப்பட்ட பரிசுப் பொருளை உதயநிதி ஸ்டாலினிடம் கட்சியினர் வழங்கினர். அதைப் பார்த்து அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

SCROLL FOR NEXT