ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பதற்கான முக்கியத்துவமும், மதிப்பும் அளவிட முடியாதவை. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்வு செய்யும் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாதான் தேர்தல்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் பொதுத்தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் சட்டப் பிரிவுக்கூறு எண் 324-ன்படி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமான ஒன்றாக, இந்திய அரசின் ஒரு அங்கமாக, 1950 ஜனவரி 25 அன்று உருவானது. முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்.
1951 முதல் நம் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 1970-கள் வரை நாடாளுமன்றத் தேர்தலும், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டுவந்தன. பின்னர் பல அரசியல் காரணங்களால் அந்தப் போக்கு மாறியது.
ஒவ்வொரு நாட்டு அரசியல் அமைப்புக்கும் ஏற்றவாறு அந்நாடுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இருக்கும். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்! ஆனால், நம் நாட்டில் நூற்றுக்கணக்கான கட்சிகள் உண்டு. எல்லாக் கட்சிகளும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தலாம்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் போட்டியிடலாம். அங்கீகாரம் இல்லாத கட்சிகளும் போட்டியிட முடியும். ஆனால், அக்கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவார்கள்.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் என்று மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் தேர்தல்கள் மூன்று வகை.
ஒரு காலத்தில், அதாவது 1952-க்கு முன்புவரை வரி செலுத்துபவர்களுக்குத்தான் ஓட்டுரிமை என்ற நிலை இருந்தது. பணக்காரர்கள்தான் ஓட்டு போட முடியும் என்ற நிலை. 1952-ல் 21 வயது நிரம்பிய அத்தனை இந்தியக் குடிமக்களும் ஓட்டு போடலாம் என்ற நிலையை உருவாக்கினார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.
இந்தியாவில் 1950-களில் இருந்த 17.6 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவற்றவர்கள். பல மேற்கத்திய நாடுகள் அப்போது சொத்துள்ளவர்களுக்கும் படித்தவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமையை அளித்தன. குறிப்பாக பெண்கள், கருப்பினத்தவரை அவை ஒதுக்கின. ஆனால், சுதந்திர இந்தியாவோ தம் குடிமக்கள் எல்லோருக்கும் வாக்குரிமையைக் கொடுத்தது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று புகழப்படுவதற்கான அஸ்திவாரம் இதுதான்.
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள கிராமங்கள், வனப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள், தீவுகள் என்று எல்லா இடங்களிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. தோணிகள் மூலமும், கோவேறு கழுதைகள் மூலமும் எளிதில் கடக்க முடியாத ஆறுகள், மலைப் பிரதேசங்கள் வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். பிரச்சினைக்குரிய பகுதிகளில் நமது ராணுவத்தினரும், போலீஸாரும் தேர்தல் நடக்க அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள்.
இன்றைக்கு 18 வயது பூர்த்தியான குடிமக்கள் அனைவரும் 3 தேர்தல்களிலும் (மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்பு) வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிட முடியும். சமூகத்தின் எல்லா பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
மக்களால்தான் அரசு, மக்களுக்காகத்தான் அரசு! நம் அனைவரின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோல முடியாது.
எனவே, 18 வயது பூர்த்தியான அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டியது முக்கியமான ஜனநாயகக் கடமை. அந்தக் கடமையைச் செய்வதில் இருந்து நீங்கள் தவறிவிடாதீர்கள். மே 16- ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் நாள். வாக்களிப்போம், நமக்கான அரசை நாமே தேர்ந்தெடுப்போம்.