தமிழகம்

தங்களைப் பற்றிய விவரங்களை நிறுவன உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: மண்டல பி.எப். ஆணையர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்தும் நிறுவன உரிமையாளர்கள் தங்களை பற்றிய விவரங்களை படிவம்-5ஏ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று மண்டல பி.எப். ஆணையர் கூறியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு வருங் கால வைப்பு நிதிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இம்மாதம் முதல் தேதியன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் பி.எப். கணக்கு எண் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தாம்பரத்தில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரெம்மி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், 50 நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆணையர் ரெமி கூறியதாவது:

தொழிலாளர்களுக்கு அவர் களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கை பராமரிப்பதற்காக யுனிவர்சல் அக்கவுண்ட் எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த எண்ணை அனைத்துத் தொழிலாளர்களும் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த எண் பெற்றுள்ள தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பி.எப். அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை படிவம் 5-ஏ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், தங்களுடைய மின்னணு வடிவிலான கையொப்பத்தையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்து, பி.எப். அலுவலக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரெமி கூறினார்.

SCROLL FOR NEXT