திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் முதல் தவணை, இரண்டாம் தவணை,முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் . இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.