தமிழகம்

செய்யூர் வெடால் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்த விவகாரம்: 2 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: செய்யூர் கிராமம் வெடால் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது தொடர்பாக கொள்முதல் அலுவலர் உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில், பல்வேறு பகுதிகளில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

அதனால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், செய்யூர் கிராமம் வெடால் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வெடால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

300 மூட்டைகள்

இதில், கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழைநீரால்நனைந்ததில் முளைத்து சேதமடைந்திருப்பது தெரிந்தது.

மேலும், கீழே தார்ப்பாய் போடாமல் நெல் மூட்டைகளை அடுக்கியதுதான் சேதத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொள்முதல் அலுவலர் மற்றும் பட்டியல் எழுத்தர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெடால் கொள்முதல் நிலையத்தில் தற்போது உள்ள 20,000 மெட்ரிக்டன் நெல்லை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு விரைந்து கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT