தமிழகம்

கரூரில் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: வாக்காளர் பட்டியல் அடிப்படையில் விசாரணை

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த 17 வயதான இளம்பெண் திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஜமீம் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தனிப்படைகளின் எண்ணிக்கையை 13 ஆக அதிகரிக்க உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு பிச்சம்பட்டியைச் சேர்ந்த பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்தபோது அவர்களின் மொபைல் போன்கள் எந்தப் பகுதியில் பயன்படுத்தப் பட்டது என்பதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம்பெண் வசித்த பகுதியில் உள்ள 3 பேரை மாயனூர் போலீஸார் ஏற்கெனவே விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மேலும் இருவரை புதன்கிழமை விசாரணைக்கு அழைத்தபோது அவர்களை அனுப்ப மறுத்து, போலீஸ் வாகனத்தை தடுத்து ஏற்கெனவே அழைத்துச் சென்றவர்களையும் விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

‘இளைய சகோதரிகளை படிக்க வைப்பேன்’

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண் அவரது குடும்பத்தில் 2-வது மகள். குடும்பத்தில் மொத்தம் 4 பெண்கள் உள்ளனர். இந்த பெண் பிளஸ் 2 முடித்துவிட்டு, தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டயப்படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரி கட்டணத்தைச் செலுத்த, கூலித் தொழிலாளியான தனது தந்தையை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக கல்லூரி தொடங்கும்வரை தானே வேலைக்குச் சென்று கல்விக் கட்டணத்தை செலுத்த முடிவு செய்ததுடன் அவ்வாறு வேலைக்குச் சென்று கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கல்லூரி கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். தொடர்ந்து படிப்பதற்கு தேவையான பணத்துக்காக வேலையைத் தொடர்ந்துள்ளார்.

மேலும், படித்துமுடித்த பிறகு, தான் வேலைக்குச் சென்று தனது இரு இளைய சகோதரிகளையும் படிக்க வைப்பேன் எனவும் பெற்றோரிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார். தனது மகளும் நன்றாக படித்து, வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றுவார், மகன் இல்லாத குறையை மகள் தீர்த்து விடுவார் என பெற்றோர் பெரிதும் நம்பியிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT