திமுக ஆட்சி அமைந்தால், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும். பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''பத்திரிகை சுதந்திரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பத்திரிகை சுதந்திரத்தை அரசுகள் உறுதிசெய்தும், மதித்தும் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆண்டுதோறும் மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப்பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டால், செய்திகளை ஒளிபரப்பினால் அவதூறு வழக்குகள் அடுக்கடுக்காகப் பாய்ந்ததை அறிவோம். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது.
திமுக ஆட்சி அமைந்தால், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும். பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.