பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்த்தி, மாணவர் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200-க்கு 1,195 மதிப் பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
மாணவி வி.ஆர்த்தி பெற்ற மதிப் பெண் விவரம் வருமாறு: தமிழ் 199, ஆங்கிலம் 197, கணிதம் 200, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 200.
மாணவர் கே.எச். ஜஸ்வந்த் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 199, ஆங்கிலம் 197, கணிதம் 200, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 200.
பாடங்களில் சாதனை
மாணவி ஆர்த்தி, மாணவர் ஜஸ்வந்த் ஆகியோர் வேதியியல், உயிரியல் பாடங்களில் 200 மதிப் பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளனர். இதேபோல தமிழ் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவராகி சேவை
கிருஷ்ணகிரி அம்மன் நகர் முதலாவது தெருவில் மாணவி வி.ஆர்த்தி வசித்து வருகிறார். இவரது தந்தை பி.வெங்கடாசலம். இவர் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பண்டகசாலை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தாய் வசந்தி. இல்லத்தரசி. மாணவி ஆர்த்தியுடன் உடன் பிறந்தவர் அபிநயா. அவர் பிஇ படித்துவிட்டு, பெங்களூருவில் விப்ரோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது மாணவி ஆர்த்தி கேரள மாநிலம் திருச்சூரில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்குச் சென்றுள்ளார்.
மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவி ஆர்த்தி கூறும்போது, ‘‘நான் மருத்துவர் ஆக வேண்டும் என லட்சியமாக கொண்டிருந்தேன். 10-ம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்தேன். எனது பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் எடுக்கப்படும். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கமே என்னால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த தேர்விலும் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன். மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்’’ என்றார்.
இருதய நிபுணர்
முதலிடம் பிடித்த மாணவர் கே.எச்.ஜஸ்வந்த், திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் வசித்து வருகிறார். இவரது தந்தை கே.ஹரிபாபு. கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். தாய் லதா. அக்கா சுவாதி. பிஇ படித்து வருகிறார். சாதனை மாணவர் ஜஸ்வந்த் கூறும்போது, ‘‘முதல் இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்ததால் என்னால் சாதிக்க முடிந்தது. தற்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். இதய நிபுணராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.