காவிரி நீர் உரிமை, மீத்தேன் திட்ட விவகாரங்களில் தமிழக விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டவர் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குகேட்டு அவர் பேசியது: காவிரிப் பிரச்சினை யில் தமிழக நலனுக்காக அதிமுக போராடி வருகிறது. ஆனால், இப் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தை வஞ்சித்தவர் கருணாநிதி. தன் சுயநலத்துக்காக டெல்டா விவசாயிகள் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி.
தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் 5,695 ஏரிகளில் தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் ரூ.2,870 கோடியில் நடந்துள்ளன. 213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 47 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.
விவசாயிகளின் நலன் காக்கவும், விவசாய உற்பத்திக்கும் அதிமுக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. ஆனால், விவசாயி களுக்கு எதிராகத்தான் திமுக எப்போதும் செயல்பட்டு வருகிறது.
நெற்களஞ்சியமான தஞ்சையை பாலைவனமாக்கும் திட்டம்தான் மீத்தேன் எரிவாயுத் திட்டம். இந்த திட்டத்துக்கு வித்திட்டவர், திமுகவின் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு. திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, 2010-ல் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. கருணாநிதி தலைமையிலான முந்தைய திமுக அரசு, தனியார் நிறுவனத்துக்கு இதற்கான உரிமத்தை 2011-ல் வழங்கியது. விவசாயிகளின் நலன் கருதி எனது அரசு, மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தது. இத்திட்டம் வளமான டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக்கிவிடும். விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும், யார் கொண்டுவந்தாலும் அதை நான் தடுத்து நிறுத்துவேன்.
விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு, தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் வெட்கமில்லாமல் ‘மீத்தேன் மற்றும் ஷேல் வாயு’ எடுக்கும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இதற்கெல்லாம் ஏமாந்துவிட டெல்டா விவசாயிகள் என்ன அவ்வளவு பெரிய ஏமாளிகளா?
மீண்டும் எனது தலைமையிலான அரசு அமைந்ததும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.