தமிழகம்

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: தனியார் மருத்துவக் கல்லூரிகள் வலியுறுத்தல்

சி.கண்ணன்

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப் பெண்கள் அடிப்படையில் கலந் தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதே நேரத் தில் தனியார் மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபற்றி மாதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.மதன் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் படவில்லை. நாங்கள் 50 சதவீதம் இடங்களை அரசுக்கு கொடுக்கி றோம். மீதமுள்ள இடங்களை பழையபடியே நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பிக் கொள்வதற்கு வசதியாக, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் அ.கனகராஜ் கூறும் போது, “அரசு மருத்துவக் கல்லூரி களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை, தனியார் மருத்துவக் கல்லூரி களுக்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது என்ற நிலை உள் ளது. முறையாக பார்த்தால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குதான் நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும்.

ஏற்கெனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 65 சதவீதம் இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்குகிறது. மீதமுள்ள 35 சதவீதம் இடங்களை நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பினால் எப்படி கல்லூரியை நடத்த முடியும். அதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

தாகூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனை மாணவர் சேர்க்கை தலைவர் என்.ஜாவித் கூறும்போது, ‘‘தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வில்லை. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் தலைவர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்பு களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அப்போது தான் தகுதியான டாக்டர்கள் கிடைப்பார்கள். தற்போதுள்ள நிலையில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். இந்த நிலை மாற வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வை விரும்புகின்ற னர். பிளஸ் 2 மதிப்பெண் மனப் பாடம் செய்து எடுப்பது. நுழைவுத் தேர்வு புரிந்துக் கொண்டு சிந்தித்து எழுதுவது. அதனால் நுழைவுத் தேர்வு வேண்டும்” என்றார்.

லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது கனி கூறும்போது, “நுழைவுத் தேர்வை வைத்தால், எல்லோருக்கும் வைக்க வேண்டும். ரத்து செய்தால், அனைவருக்கும் ரத்து செய்ய வேண்டும். தற் போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்துக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம். நாடுமுழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்திய பிறகு நுழைவுத் தேர்வை கொண்டு வரவேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT