சென்னை: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக உரியவிவரங்களை சமர்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்வது குறித்துபரிசீலிக்க வேண்டும்.
அதற்கேற்ப தொகுப்பூதியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் அனைத்து வகை பணியிடங்களிலும் தற்போதுபணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரித்து துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதவாறு பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்துமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.