தாம்பரம்: சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை வந்த தொலைபேசி அழைப்பில் தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு மர்ம நபர் ஒருவர் இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் மற்றும் போலீஸார் மோப்ப நாய் ரூபா மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாம்பரத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள், ரயில்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். இதில் எதுவும் சிக்காததால் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததுதெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவும் அதிமுக ஒற்றை தலைமையை ஓபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேநபர், கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்வரான பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.