அரியலூர்: அரியலூர் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மழைநீர் வெளியில் செல்ல வழியில்லாமல் அங்கேயே தேங்குவதால், மருத்துவமனை வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளதால் புதிய கட்டிடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூரில் திருச்சி சாலையில் ஒற்றுமை திடல் எதிர்புறம் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு, அரியலூர் நகரைச் சேர்ந்த கால்நடைகள் வளர்ப்போர், தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தினமும் 50-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை தற்போது செயல்படும் கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளும், மருத்துவமனைக்கு முன்பு உள்ள திருச்சி சாலையும் மேடாகிவிட்டதால், மருத்துவமனை தற்போது தாழ்வாக உள்ளது.
இதனால், அப்பகுதியில் மழை பெய்யும்போதெல்லாம், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியே செல்ல வடிகால் வசதி இல்லாததால், நாள் கணக்கில் தேங்குகிறது. மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
மேலும், மழைநீர் வடியும் வரை அந்த வளாகத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும், கால்நடைகளைக் கட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பகுதியைப் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.
எனவே, அதே வளாகத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாத கால்நடை மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக கால்நடை வளர்ப்போர் கூறும்போது, “கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாததால், அதன் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும். அதற்கு முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் போதிய மண்ணைக் கொட்டி மேடாக மாற்ற வேண்டும். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கதவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘இந்த வாரத்தில் புதிய கட்டிடத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்பிறகு, மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’’ என்றனர்.