சென்னை: கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர் மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தொடர்பாக, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளின் விடுதி கட்டடங்கள் வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
மேலும், பொதுப் பணித் துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத் துறை பணிகளளை ஆய்வு செய்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விரைவாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பல அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் விவரம்.
> அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் உடனடியாக மதிப்பீடு தயார் செய்து, நகர ஊரமைப்பு இயக்ககம் அனுமதி பெற்று பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
> மதிப்பீடு தயார் செய்யும்போது, அனைத்துத் தேவைகளையும் உள்ளடக்கி மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.
> திருந்திய நிர்வாக அனுமதி 10% சதவீதம் வரை சில தவிர்க்க முடியாத இனங்களில் மட்டுமே ஏற்கப்படும்.
> நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
> கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும்.
> புதிய கட்டடங்கள் கட்ட வேண்டுமென்றால், உரிய கருத்துரு அரசுக்கு அனுப்ப வேண்டும்.
> புதிய கட்டடங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் எழில்மிக்கதாக இருக்க வேண்டும்.
> முதல்வர் வெளியிட்ட புதிய முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும்.
> ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைப்படம் 2 லட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்றுதான் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
> தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை தொடங்கும்போது, கவனமுடன் தரத்தை உறுதிசெய்யப்பட வேண்டும்.
> ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யும்போது திறனை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார்.