மாமல்லபுரம்: மாமல்லபுரம் நெம்மேலியில் உள்ள கடநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளான நீலாங்கரை, திருவான்மியூர், பாலாவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமப்பகுதியில் கடற்கரையையொட்டி 110மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட கடல்நீர சுத்திகரிப்பு ஆலையில் நேற்று திடீர் பழுது ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ் உள்ள அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி, தேனாம்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள மயிலாப்பூர், மந்தைவெளி, பெசன்ட்நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலாவாக்கம், பெருங்கடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் 21ம் தேதி இரவு 10 மணி முதல், 23ம் தேதி காலை 10 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவசரத் தேவைக்காக லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுகொள்ள கீழ்காணும் அதிகாரிகளை சோழிங்கநல்லுார்- 81449 30915, தேனாம்பேட்டை 81449 30909, அடையாறு 81449 30913, பெருங்குடி 81449 30914 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்கள் கூறியது: ''நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைப்பதற்கான பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பழுது சீரடைந்ததும், மேற்கண்ட பகுதிகளில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்'' என்றனர்.