மதுரை: ஒரே நாளில் 2 ஊர்களுக்குப் பணியிட மாறுதல் என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் பதவி விலக தயார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.
மதுரை அருகே குலமங்கலத்தில் அவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் அதிகாரிகள் மாறுதல் என்பது இயல்பானது. குடும்பச் சூழல் காரணமாக சார்-பதிவாளர் ஒருவர் 25 நாட்களுக்கு மட்டும் பணியிட மாறுதல் கேட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் காலியிடம் இருந்ததால் அவருக்கு மாறுதல் வழங்கப்பட்டது. 25 நாட்கள்முடிந்ததும் மதுரை மகால் பத்திரப்பதிவு அலுவலக காலியிடத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆனால், ஒரே நாளில் 2 ஊர்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் சொல்வது உண்மை என நிரூபித்தால் நான் பதவி விலக தயார். இல்லையெனில் அண்ணாமலை பதவி விலகுவாரா?
கடந்த ஆட்சியில் போலியாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தடுக்க திமுக ஆட்சியில் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளோம். நாட்டிலேயே முன்மாதிரியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு மத்திய அரசு 7 மாதங்களாகியும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதில் அண்ணாமலை கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.