தமிழகம்

ஈரோடு | பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா: 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

ஈரோடு/நாமக்கல்: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவராக டி.தினகரன்(57) பணிபுரிந்து வருகிறார். இதே மருத்துவமனையில், பணிபுரியும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் சண்முகவடிவு உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கடந்த வாரம் பணி நாளன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அதே நாளில், மருத்துவ மாணவரான தனது மகன் அஸ்வினை(24),அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினகரன் அனுமதி அளித்துள்ளார். பணி நாளில்,உரிய விடுமுறையின்றி சுற்றுலா சென்றது குறித்தும், அவரது மகனைக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தது குறித்தும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு ஆட்சியர்எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார். ஈரோடு சுகாதாரத் துறை இணைஇயக்குநர் கோமதி, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இதில், குற்றச்சாட்டுஉண்மை எனத் தெரியவந்தது.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தரப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் ஏ.சண்முகவடிவு, பணி நேரத்தின்போது பணியில் இல்லை. அதுபோல் மருத்துவர் டி.தினகரன் என்பவரது மகன் டி.அஸ்வின் அரசு மருத்துவராக இல்லாத நிலையில், தந்தையின் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் குடும்பத்துடன், பணி நேரத்தின்போது ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், 2 மருத்துவர்களின் மீதான புகார் உண்மையென தெரியவந்தது. இதையடுத்து 2 மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

SCROLL FOR NEXT