சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 294 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 1,883 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கரோனா தொடர்பான அறிகுறிகளுடன் வரும் நபர்கள் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தும்படி கடிதம் வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 448 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை மையங்கள் சார்பில் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவற்றில் சில மண்டலங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்கள் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் விவரங்கள் பெறப்படுகின்றன. இந்த மண்டலங்களைசார்ந்த பூச்சியியல் வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளின் விவரங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பதால், மக்கள்முகக்கவசம் அணியுமாறும், சமூகஇடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினர்.